மனைவி கருப்பாக இருப்பதாக கூறி திட்டினால் அது குற்றச் செயல் என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவர் 1999ம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தனது மனைவி கருப்பாக இருப்பதைக் கூறி திட்டி வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பாத்திமா, இரண்டே மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.
மரணமடைவதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தனது நிறத்தைக் கூறி கணவர் திட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றம், மனைவியை தற்கொலை செய்யத் தூண்டியதாக கூறி பரூக் பாட்சாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து பரூக் பாட்சா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒரு பெண்ணின் நிறத்தையோ, அழகையோ அவமானப்படுத்தும் வகையில், கருத்துக்கள் தெரிவிப்பது, உடல் ரீதியாக செய்யும் துன்புறுத்தலை விட மோசமானது, கொடுமையானது. பெண்ணுக்கு அது மிகுந்த துன்புறுத்தலைத் தரும்.குற்றவாளியின் மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மன ரீதியில் கொடுமைப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
நிறத்தை கூறி மனைவியை திட்டினால் குற்றம்
வகை:
சேதி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment